பணயக்கைதிகளின் விடுவிப்பு குறித்து ஹமாஸ் தகவல்: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...
ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்தான தகவல்களை போர் நிறுத்த மத்தியஸ்தவர்களிடம் ஒப்படைத்துள்ளது.
இதில் இஸ்ரேல் பணயக் கைதிகளின் விடுவிப்பு குறித்து சொல்லப்பட்டுள்ளது.குறித்த தரவுகள் அமெரிக்காவிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இனி உங்களிடம் தமிழில் பேசுவேன் - நரேந்திர மோடி
தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. தொழிநுட்பத்தின் உதவியுடன் இனி நான் உங்களுடன் தமிழில் பேச உள்ளேன். நமோ செயலி இனி தமிழ் மொழியிலும் செயல்படும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலமாக இனி எனது அனைத்து உரைகளையும் நீங்கள் தமிழில் கேட்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
நிவாரணப் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு
வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில்,6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் டிக்-டொக் செயலிக்கு கட்டுப்பாடு
டிக்-டொக் செயலியை கட்டுப்படுத்துவது தொடர்பான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டிக்-டாக் செயலியை கட்டுப்படுத்துவது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக 352 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட பின்னர் இந்த மசோதா சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று (15) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், சேதம் குறித்த விபரங்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படகு மூலம் இத்தாலிக்கு பயணித்தவர்கள் மாயம்
லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலிக்கு படகு மூலம் பயணித்த 60 பேர் மூழ்கியிருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து இத்தாலிய கடலோரக் காவல்படையின் ஒருங்கிணைப்பில் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.