அமெரிக்காவில் டிக்டொக்கை தடை செய்தால் முகநூல் வலுப்பெறும்: நிலைப்பாட்டை மாற்றிய ட்ரம்ப்

OruvanOruvan

Donald Trump CNN

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிக்டொக் காணொளி செயலி அரசியலில் சம்பந்தப்படுத்தப்பட்டு பேசப்பட்டு வருகிறது.

குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட எதிர்பார்த்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிக்டொக் செயலிக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட உள்ள சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

டிக்டொக் இல்லாவிட்டால் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி மெட்டாவுக்கு சொந்தமான முகநூல் வலுப்பெறும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

முகநூல் அமெரிக்க அரசுக்கு அச்சுறுத்தல்

முகநூல் நேர்மையானது அல்ல எனவும், டிக்டொக் மீதான தடையால் முகநூல் பயனடைவதை விரும்பவில்லை.

டிக்டொக்யை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என காண்பதை ஏற்றுக்கொள்கிறேன்.எனினும் முகநூல் அமெரிக்க அரசுக்கு அச்சுறுத்தல் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

டிக்டொக் செயலியை தற்போது அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலி இல்லாத பட்சத்தில் அனைவருக்கும் பைத்தியம் பிடிக்க வாய்ப்புள்ளது.டிக்டொக்கில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு கேபிடல் கட்டிடத்தின் மீதான தாக்குதலின் போது, ​​​​மெட்டாவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்த டிரம்பின் பதிவுகள் நீக்கப்பட்டன. இதனால் டிரம்ப் மெட்டா நிறுவனத்தின் மீது கோபத்தில் இருந்து வருகிறார்.

டிரம்புடன் குடியரசுக் கட்சியினரும் முகநூலை விமர்சித்து வருகின்றனர். டிரம்ப் அண்மையில் வெளியிட்ட இந்த கருத்துக்களுக்குப் பின்னர், பங்குச் சந்தையில் முகநூலின் பங்குகள் சரிவை சந்தித்தன.

எது எப்படி இருந்த போதிலும் டிரம்ப் ஜனாதிபதி பதவி வகித்த போது, கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் TikTok மற்றும் WeChat ஐ தடை செய்ய முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றங்கள் தலையிட்டு இந்த முயற்சியை தடுத்தன. டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சித்து வரும் நிலையில், டிக்டொக் தடை குறித்த நிலைப்பாட்டை மாற்றியதன் பின்னணியில் வலுவான அரசியல் தந்திரம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர்,யுவதிகளை கவருவதும் மறுபுறம் தனக்குப் பிடிக்காத ஃபேஸ்புக்கை விமர்சிப்பதும் ட்ரம்பின் நோக்கம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பைடன் அரசின் டிக்டொக்கை தடையும் சட்டமூலம்

அமெரிக்காவில் தற்போது 17 கோடி பேர் டிக்டொக்கை பயன்படுத்துகின்றனர்.

டிக்டொக்கை தடை செய்யும் முக்கிய சட்டமூலத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நாளை புதன்கிழமை நிறைவேற்ற உள்ளது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அதில் கையெழுத்திடுவேன் என ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்கனவே கூறியுள்ளார்.

இந்த நிரைலயில்,கடந்த காலத்தில் அமெரிக்கர்களின் தரவை சீனாவுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும், அதனை எப்போதும் பகிர போவதில்லை எனவும் டிக்டொக் செயலியின் உரிமையாளரான பைட் டான்ஸ் தெரிவித்துள்ளது.

செயலி மீதான தடை அமெரிக்க மக்களின் கருத்து சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமையை மீறும் செயல் எனவும் கூறியுள்ளது.