ரஃபாவில் இருந்து 68 சிறுவர்களை வெளியேற்றிய ஜெர்மன்: விமர்சங்களை முன்வைக்கும் வலதுசாரி அரசியல்வாதிகள்

OruvanOruvan

Germany helps rescue 68 children from Rafah MAHMUD HAMS

காசாவில் உள்ள ஒரு உதவி மையத்தில் இருந்து மேற்கு கரைக்கு சிறுவர்கள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றுவதற்கான உதவிகளை ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, 68 சிறுவர்கள், 11 பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ரஃபா நகரில் இருந்து இவ்வாறு தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

SOS சிறுவர் கிராமங்கள் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஜெர்மன் வெளியுறவு அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது தீவிர முயற்சி இறுதியில் வெற்றியடைந்ததில் நிம்மதியடைவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வெளியேற்றமானது இஸ்ரேலில் உள்ள தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போர் நடவடிக்கை காரணமாக சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகளவான அகதிகள் ரஃபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.

பலர் நெரிசலான தங்குமிடங்களிலும், தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த பகுதிக்கு உதவிகள் கிடைப்பது தடைப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஏனைய பொருட்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், முழு அளவிலான தாக்குதல் நடத்தப்படும் நிலையில் கடுமையான மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இருப்பினும், எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் முன்னதாக ரஃபாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களில் வேலை செய்வதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.