காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல் - இலங்கை கண்டனம்: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...
காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல் - இலங்கை கண்டனம்
காசாவில் நிவாரண உதவிகளை பெறுவதற்காக காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்து இலங்கை கவலை கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டால் மடியும் காசா குழந்தைகள்
காசாவில் நிலவும் பஞ்சத்துக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், காசா நகரில் உதவி கோரி வந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மற்றொரு பயங்கரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (Yingluck Shinawatra) தனது அப்போதைய அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு திட்டங்களை விளம்பரப்படுத்த 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டது தொடர்பான ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்துக்கு புற்றுநோய்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (Isro) தலைவர் எஸ் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நாளில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டிறியப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரோயல் மெயில் முத்திரை கட்டணங்களை அதிகரித்துள்ளது
பிரித்தானியாவில் ரோயல் மெயில் இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக முத்திரை கட்டணங்களை அதிகரித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு முத்திரைகளில் 35,25 பென்ஸ்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விலை அதிகரிப்பு எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெய்ட்டி வன்முறை; 72 மணிநேர அவசரகால நிலை, ஆயிரக் கணக்கான கைதிகள் தப்பியோட்டம்
ஹெய்ட்டியின் அரசாங்கம் வார இறுதியில் வன்முறை வெடித்ததை அடுத்து, 72 மணிநேர அவசரகால நிலையினை அறிவித்துள்ளது. நாட்டின் இரண்டு பெரிய சிறைச்சாலைகளில் மீதான தாக்குதலை அடுத்து ஆயிரக் கணக்கான கைதிகள் தப்பியோடியுள்ளனர். வன்முறையினால் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கறுப்பின மக்களுடன் ட்ரம்ப் - AI வெளியிட்ட போலிப் படம்
டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க ஊக்குவிப்பதற்காக AI (செயற்கை நுண்ணறிவு) உருவாக்கிய கறுப்பின வாக்காளர்களின் போலி படங்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.
வொஷிங்டன் டிசி தேர்தலில் டிரம்பை வீழ்த்தினார் நிக்கி ஹேலி
வொஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் முன்னாள் தென் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி (Nikki Haley) டொனால்ட் டிரம்பை தோற்கடித்துள்ளார். குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக 2024 பிரச்சாரத்தில் முன்னாள் ஜனாதிபதியை எதிர்த்து அவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
கலிப்போர்னியாவில் கடும் பனிப்புயல்
வடக்கு கலிபோர்னியாவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது.சியரா நெவாடாவில் உள்ள மிகப்பெரிய நெடுஞ்சாலை பனி காரணமாக மூடப்பட்டுள்ளது. எதிர்ரும் நாட்களில் பனிப்புயல் தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.பல முக்கிய வீதிகளில் பனி குவிந்துள்ளதுடன் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த வீதிகளில் எப்போது போக்குவரத்து வழமை நிலைமைக்கு திரும்பும் என்பது தெரியவில்லை. பனிப்பொழிவு காரணமாக வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
காசா போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா உடனடி அழைப்பு
காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் பெரும் துன்பம் ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம் அடுத்த ஆறு வாரங்களுக்கு உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.