குறைந்த ஊதியம் மற்றும் பணிச்சுமையால் தாதியர்கள் வேலை விட்டு வெளியேறலாம்: இங்கிலாந்து அரச தாதியர் கல்லூரி எச்சரிக்கை

OruvanOruvan

Nurse wavebreakmedia/ShutterStockphotos.com

இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை (NHS) மற்றும் தாதி ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டார் குறைந்த சம்பளம் மற்றும் அதிக பணிச்சுமை காரணமாக வேலையில் இருந்து வெளியேறலாம் என இங்கிலாந்து அரச தாதியர் கல்லூரி ( RCN) எச்சரித்துள்ளது.

அதிகமான ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் மேலதிக நிதியை ஒதுக்க வேண்டும் என அரச தாதியர் கல்லூரி கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழியர் பற்றாக்குறையால் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள தேசிய சுகாதார சேவையில் இருந்து, மேலும் ஊழியர்கள் வெளியேறுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு பணவீக்க வீதத்திற்கும் மேல் ஊதிய உயர்வு மற்றும் மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும் எனவும் அரச தாதியர் கல்லூரி மற்றும் தேசிய சுகாதார சேவை என்பன கோரிக்கை விடுத்துள்ளன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அரச தாதியர் கல்லூரி தனது பரிந்துரைகளை தேசிய சுகாதார சேவையின் சம்பள மீளாய்வு அமைப்பிடம் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு சம்பள சீர்திருத்தம் குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளது .

தேசிய சுகாதார சேவையின் பாதிக்கும் மேற்பட்ட தாதியர்கள், குறைந்த சம்பளம் மற்றும் இதர சலுகைகள் இல்லாத காரணத்தால் சேவையில் இருந்து வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக அரச தாதியர் கல்லூரி தெரிவித்துள்ளது.

அத்துடன் தேசிய சுகாதார சேவையினர் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடலாம் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இங்கிலாந்தில் மாத்திரம் தேசிய சுகாதார சேவையில் சுமார் 42 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுகின்றன.

இது மேலும் அதிகரித்தால், தேசிய சுகாதார சேவைக்கு கடும் நெருக்கடி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.