ட்ரம்பின் பதவிக் காலத்தில் அமெரிக்க-இந்திய உறவுகள் வலுவடைந்தன: இந்திய வெளிவிவகார அமைச்சரின் முக்கியத்துவமிக்க கருத்து

OruvanOruvan

Indian External Affairs Minister S. Jaishankar

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்த போது, இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதியாக பதவி வகித்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு முன்னர் எப்போதும் இல்லாததை விட வலுவாகியதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மோதல், போட்டி, ஒத்துழைப்பு மற்றும் உருவாக்கம் குறித்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜெய் சங்கர் இதனை கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு டிரம்ப் இந்தியாவுக்கு விஜயம் செய்ததையும், மோடியும் பலமுறை அமெரிக்கா பயணம் மேற்கொண்டதையும் ஜெய்சங்கர் நினைவூட்டியுள்ளார்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் டிரம்ப்பால் மட்டுமல்ல, பில் கிளின்டனுக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியாலும் பலப்படுத்தப்பட்டன எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

OruvanOruvan

Former U.S. President and Republican presidential candidate Donald Trump

ஜோ பைடனை விட ட்ரம்புக்கே அதிக வாய்ப்பு

எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் ஏற்கனவே நடந்து வரும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் தேர்தல்களில் டிரம்ப் முன்னேறி வருகிறார்.

அண்மையில் அவர் தென் கரோலினாவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நிக்கி ஹாலேவை தோற்கடித்தார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதுடன் டொனால்ட் ட்ரம்பும் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளார்.

ஏற்கனவே வெளியாகியுள்ள சில கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு அமைய பைடனைவிட விட டிரம்புக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.