அமெரிக்க இரவுநேரக் கேளிக்கைவிடுதிக்கு சென்ற இந்திய மாணவர் இறப்பு: வெளியான அதிர்ச்சி காரணம்
அமெரிக்காவில் உள்ள இலினாய் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவரான 18 வயது அகுல் தவன், கடந்த ஜனவரி 20ஆம் திகதி கடுங்குளிர் காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது மரணம் தொடர்பாகக் கிடைத்துள்ள புதிய தகவல் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது.
சம்பவ நாளன்று அகுல் தவன் தன்னுடைய நண்பர்களுடன் இரவுநேரக் கேளிக்கைவிடுதி ஒன்றுக்குச் சென்றதாகவும் உள்ளே செல்ல அகுல் தவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக வெளியே கடுங்குளிரில் அவர் இருந்ததால், குளிரில் உறைந்து இறந்தார் என்றும் கூறப்படுகிறது.
அகுல் தவன் பலமுறை கேளிக்கைவிடுதிக்குள் நுழைய முயன்றதும் ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்காததும் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
அன்றிரவு வெப்பநிலை -2.7 டிகிரியாக இருந்தது. மறுநாள் காலை அகுல் ஒரு கட்டடத்தின் பின்னால், இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கலிஃபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கும் அகுல் தவனின் பெற்றோர், காணாமல் போனவர்களைத் தேடுவது தொடர்பான நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.