அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்: 1200 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து - பாடசாலைகள் மூடப்பட்டன

OruvanOruvan

Snowstorm Hits US

பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக 1,220 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பனிப்புயல் தாக்கத்தினால் நியூயோர்க் நகரிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டதுடன், வாகனம் செலுத்துவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துமாறும் அவசர அறிவிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் அதிக சனத்தொகையை கொண்ட நியூயோர்க் நகரில் கடந்த இரண்டு வருடங்களில் பனியை அகற்றுவதற்கான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நான்கில் இருந்து எட்டு அங்குலம் அதாவது 10 முதல் 20 சென்றி மீட்டர் வரை பனிப்பொழிவு காணப்படும் எனவும் மணித்தியாலத்திற்கு 40 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சுமார் 32 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் உள்ள பல கிராமப்புறங்களுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. மேலும் மின்சார விநியோகம் தடைபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், கிழக்கு கடற்கரையின் சில பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.