கத்தார் செல்கிறார் மோடி: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story

கத்தார் செல்கிறார் மோடி

கத்தாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படையின் 8 முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கத்தாருக்குச் செல்லவுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி மோடி கத்தார் செல்கிறார்.

மைதானத்தில் மின்னல் தாக்கியத்தில் கால்பந்தாட்ட வீரர் மரணம்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பந்துங் கிலிவங்கி என்ற மைதானத்தில் நேற்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது, 34 வயதான வீரர் ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளதுடன் எதிர்பாராத இந்த சம்பவம் காரணமாக சில வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

TikTokஇல் இணைந்த அமெரிக்க ஜனாதிபதி பைடன்

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி ஜோ பைடன் டிக்டாக் செயலியில் இணைந்துள்ளார். @bidenhq எனும் கணக்கில் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இளம் வாக்காளர்களை ஈர்ப்பதற்காகவே பைடன் டிக்டாக் செயலியில் தனது கணக்கை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

OruvanOruvan

Alexander Steph Hein President of Finland

பின்லாந்து ஜனாதிபதியாக முன்னாள் பிரதமர் தெரிவு

பின்லாந்து ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றதுடன் தேசிய கன்சர்வேடிவ் தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அலெக்ஸ்சேன்டர் ஸ்டெப் ஹெயின் 51வீத வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றுள்ளதுடன் அவர் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் தொடர்பில் அனுபவங்களை கொண்டுள்ள அரசியல்வாதி என்பதுடன் 2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பிரதமராகவும் 2015 முதல் 2016 ஆம் ஆண்டு வரை நிதியமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அல்ஜசீரா செய்தியாளர் ஹமாஸின் மூத்த தளபதி-இஸ்ரேல் இராணுவம்

பாலஸ்தீன அல்ஜசீரா செய்தியாளர் மொஹமட் வாஷா, ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதியாக பணியாற்றி வருவதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளதுடன் காஸாவில் ஹமாஸ் முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் வாஷாவின் மடிக்கணனியில் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது.

ஸ்பெயினில் ராட்டினம் விபத்து - 14 பேர் காயம்

ஸ்பெயினின் கட்டலோனியா சண்டே பகுதியில் உள்ள கேளிக்கைப் பூங்காவில் ரோலர்கோஸ்ட்டர் (rollercoaster) விபத்துக்கு உள்ளானதில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகமான CNN தெரிவித்தது. காயமடைந்த 14 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் இன்று பதிவான நிலநடுக்கம்

மியான்மரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 15 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என அந்நாட்டு புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் மண்சரிவு - உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 63 பேரைக் காணாமல் போயுள்ள நிலையில், தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.