மலேசியாவில் இஸ்லாமியச் சட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை: கிளந்தான் மாநில அரசும் உச்ச நீதிமன்றமும் கூறுவது என்ன?

OruvanOruvan

கிளந்தானில் நடைமுறைப்படுத்தப்பட்ட 16 இஸ்லாமியச் சட்டங்கள் மலேசியக் கூட்டரசு அரமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவை என்றும் அவை செல்லுபடியாகாது என்றும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

மலேசியாவின் சிவில் சட்டங்களில் அவற்றுக்கான சட்டப் பிரிவுகள் ஏற்கெனவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பால் மலேசியாவின் இஸ்லாமியச் சட்டங்கள் வலுவடைந்திருப்பதாக அந்நாட்டின் ஷரியா நீதித்துறை தெரிவித்துள்ளது.

இஸ்லாமியச் சட்டங்களின் கோட்பாடுகளுக்கும் மலேசிய சிவில் சட்டத்துக்கும் இடையே முரண்பாடுகள் இல்லை என்றும் இஸ்லாமிய சட்டங்களுக்குக்கீழ் குற்றங்களாகக் கருதப்படுபவை மலேசிய சிவில் சட்டத்துக்கும் புறம்பானவையாக உள்ளன என்றும் மலேசிய ஷரியா நீதித்துறை தெரிவித்தது.

மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றி விளக்கம் அளித்த கிளந்தான் ஷரியா நீதித்துறை, அந்த 16 குற்றங்களுக்கான தண்டனை சிவில் சட்டத்தின்கீழ் விதிக்கப்படும் என்று கூறியது.

“அந்த 16 குற்றங்கள் தொடர்பான வழக்குகளை ஷரியா நீதிமன்றம் ஏற்று நடத்த முடியாது. ஆனால் அவை சிவில் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும். எனவே, அந்தக் குற்றங்களில் கிளந்தான் முஸ்லிம்கள் ஈடுபட்டால் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படாது என்றாகிவிடாது,” என்று கிளந்தான் ஷரியா நீதித்துறை கூறியது.

மலேசியாவில் இரு வேறு சட்ட அமைப்புகள் உள்ளன. அங்கு இஸ்லாமியக் குற்றவியல், குடும்ப நல சட்டங்கள் நாட்டின் சிவில் சட்டங்களுடன் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்துகிறது. மலேசியாவில் சிவில் சட்டங்கள் அந்நாட்டின் நாடாளுமன்றம் இயற்ற மாநில சட்டமன்றங்கள் இஸ்லாமிய சட்டங்களை இயற்றுகின்றன.

மலேசிய உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது பேர் கொண்ட அமர்வு 8-1 என்ற பெரும்பான்மையில் கிளந்தான் மாநில அரசின் 16 ஷரியா குற்றவியல் சட்டங்கள் செல்லாது என்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 9) அன்று தீர்ப்பளித்தது. அந்தச் சட்டங்களில், முறையற்ற பாலியல் உறவு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல், சடலங்களுடன் பாலியல் உறவு கொள்வது உட்பட்ட சட்டங்கள் அடங்கும்.

கிளந்தான் அரசு இயற்றிய சட்டப் பிரிவுகள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின்கீழ் வருவதாக மலேசிய உச்சநீதிமன்றம் தெரிவித்தது.