இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை: ஆட்சி அமைக்கப் போவது யார்? ஆச்சரியத்தை ஏற்படுத்திய முடிவுகள்

OruvanOruvan

Pakistan Election 2024

பாகிஸ்தானின் பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்களை முன்னிலையில் வைத்துள்ளது.

தேசிய சட்டமன்றத் தொகுதிகளில் 101 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 93 பேர் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள்.

இது 75 இடங்களில் வெற்றி பெற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை விட அவர்களை முன்னிலைப்படுத்துகிறது.

எவ்வாறாயினும் யார் ஆட்சி அமைப்பது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆச்சரியத்தை ஏற்படுத்திய முடிவுகள்

கருத்து மோதல்கள் தொடர்வதால், வெற்றி பெறாத சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளால் நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.

தேர்தலில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்பட்ட பிடிஐ மற்றும் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ஆகிய இரண்டும் தாங்கள் அடுத்த அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாக கூறுகின்றன.

இம்ரான் கான், ஊழல் முதல் சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டது வரையிலான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் போட்டியில் இருந்து அவரது கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதால், பெரும்பாலானவர்கள் ஷெரீப்பின் கட்சி வெற்றிபெரும் என எதிர்ப்பார்த்தனர். எனினும் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிராதான கட்சிகள்

ஆட்சியமைக்க, ஒரு வேட்பாளர் தேசிய சட்டமன்றத்தில் 169 இடங்களின் தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கூட்டணியின் தலைவராக இருப்பதைக் காட்ட வேண்டும்.

மூன்றாவது பெரிய வாக்குகளைப் பெற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பிலாவல் பூட்டோ, இம்ரான் கானின் பிடிஐ அல்லது நவாஸ் ஷெரீப்பின் கட்சியுடன் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், பூட்டோவின் தந்தை லாகூரில் ஷெரீப்பின் சகோதரரை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கராச்சியை தளமாகக் கொண்ட MQM கட்சியும் வாக்கெடுப்பில் வியக்கத்தக்க வகையில் 17 இடங்களை வென்றுள்ளதுடன், எந்த கூட்டணியிலும் பங்கு வகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சட்டமன்றத்தின் 366 இடங்களில், 266 இடங்கள் நேரடி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.

மேலும் 70 இட ஒதுக்கீடு அடிப்படையில் 60 இடங்கள் பெண்களுக்கும், 10 முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் சட்டமன்றத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியின் பலத்திற்கும் ஏற்ப ஒதுக்கப்படுகின்றன.

அரசியல் நிபுணர்களின் எச்சரிக்கை

தேர்தல் முடிவடைந்த நிலையிலும் அங்கு போராட்டங்கள் ஓயவில்லை. ஞாயிற்றுக்கிழமை, ராவல்பிண்டி நகரில் உள்ள தேர்தல் ஆணையக் கட்டிடத்திற்கு அருகில் போராட்டங்கள் இடம்பெற்றன.

கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அதேநேரத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கான், தேர்தல் ஆணைய அலுவலகங்களுக்கு வெளியே அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேநேரத்தில் சனிக்கிழமையன்று, நவாஷ் ஷெரீப், ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க மற்ற கட்சிகளுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்தார்.

முரண்பாடுகளுக்கு எதிராக, இம்ரான் கானின் ஆதரவு உறுதியானது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் "நீண்டகால அரசியல் ஸ்திரமின்மையை" எதிர்கொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, தேர்தல் முடிவுகளை மாற்றியதில் கூட்டுச்சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், பாகிஸ்தான் அதிகாரிகள் எந்த முறைகேடும் இல்லை என்று மறுத்துள்ளனர்.