ரஃபா நகரில் இருந்து வெளியேற தயாராகும் லட்சக்கணக்கான மக்கள்: தாக்குதல் நடத்த ஆர்வம் காட்டும் இஸ்ரேல்

OruvanOruvan

Gaza Al Jazeera

பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் ரஃபா நகரில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரா தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இதற்கு முன்னர் சாதாரண பாலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியேற்றும் திட்டம் வகுக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ரஃபாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களை தாக்கி அழிக்குமாறு அவர் பணித்துள்ளார். மக்கள் அந்த நகரில் இருக்கும் வரை ஹமாஸ் அமைப்பினரை அழிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரஃபா நகரில் இருந்து வெளியேற 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தயாராகி வருகின்றனர். மேலும் அந்த நகருக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் பலர் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர் இஸ்ரேஸ் தாக்குதலை ஆரம்பித்தால், கடுமையான உயிரிழப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

இதனால், ரஃபா நகர மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன் மக்கள் தப்பிச் செல்ல வழியில்லாமல் தவிப்பதாக ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான பிரிவின் பிரதானி பிலிப் லஷாரினி தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு அணமையில் முன்வைத்த போர் நிறுத்த யோசனையை இஸ்ரேல் ஏற்க மறுத்ததுடன் ஹமாஸ் போராளிகளை முற்றாக அழிக்கும் வரை போர் தொடரும் எனவும் கூறியது.

கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் காஸா நிலப்பரப்பின் மீது நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறார்கள்.

இதனிடையே காஸாவில் மருத்துவமனை ஒன்றின் மீது இஸ்ரேல் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,இஸ்ரேல் காஸா மீது மும்முனை தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருகிறது.