பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக நவாஸ் ஷெரீப் அறிவிப்பு: எண்ணி முடிக்கப்படாத வாக்குகள், நீடிக்கும் குழப்பம்

OruvanOruvan

Nawaz Sharif, Pakistan's former prime minister Photo credit - Bloomberg

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தேசியத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதுடன், தனது கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) முடிவுகளில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

265 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தனது கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதை வெளியிடாமல் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

“தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள பாகிஸ்தான் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அமைப்புகளும் இணைந்து சாதகமான பங்கை வகிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தனது பிரதிநிதிகள் மற்ற அரசியல் கட்சிகளைச் சந்தித்து பேசுவார்கள் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தானில் கூட்டணி அமைப்பது குறித்து சக போட்டியாளரான பிலாவல் பூட்டோ சர்தாரியின் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர் கூறியிருந்தார்.

நவாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளர் இஷாக் தார் உள்ளூர் தொலைக்காட்சியான சமா தொலைக்காட்சியில் இவ்வாறு கூறியிருந்தார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் அரசாங்கத்தை அமைக்கும் "நிலையில்" உள்ளது, மேலும் 265 இடங்களில் 90 இடங்களை கைப்பற்றும் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் தேர்தல் 2024: இதுவரை என்ன முடிவுகள் காட்டுகின்றன?

156 தேசிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு வேட்பாளர்கள் இதுவரை 62 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 46 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

110 இடங்களின் முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 169 இடங்கள் தேவைப்படும்.

பாகிஸ்தான் தேர்தல் 2024: முழு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?

வாக்குப்பதிவின் போது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஒரு நாள் மொபைல் நெட்வொர்க் முடக்கம் காரணமாக முடிவுகள் தாமதமாகியுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக வாக்குச் சீட்டுகளில் முறைகேடு நடந்ததாக இம்ரான் கானின் கட்சி குற்றம் சாட்டியது.