மேற்குலக நாடுகளிடம் உடனடியாக ஆயுத உதவிகளை கோரும் உக்ரைன்: ரஷ்யாவுக்கு கூடுதலான இழப்பை ஏற்படுத்துவோம்-செலென்ஸ்கி
உடனடியாக இராணுவ உதவிகளை அனுப்பிவைக்குமாறு உக்ரைன், மேற்குலக நாடுகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு பீரங்கிக் குண்டுகள் தேவைப்படுவதாகவும் அவற்றை உடனடியாக சீக்கிரம் அனுப்பி வைக்குமாறும் அந்த நாடு கோரியுள்ளது.
ரஷ்யா அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதில் தாக்குதல்களை நடத்த பீரங்கி குண்டுகள் அவசரமாக தேவைப்படுவதாக உக்ரைன் கூறியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய நடத்தும் ஒவ்வொரு ஏவுகணை தாக்குதலுக்கும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமீர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நாட்டின் பாதகாப்பை வலுப்படுத்துவது மாத்திரமல்ல, ரஷ்யாவுக்கு கூடுதலான இழப்பை ஏற்படுத்துவதே உக்ரைனின் இலக்கு எனவும் கூறியுள்ளார்.
ரஷ்யா, ஆளில்லா விமானங்கள்,ஏவுகணைகள், போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கான ஆயுதங்களை உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தி வருவதாக உக்ரைன் இராணுவ தளபதி வெலரி சலுஷ்னி தெரிவித்துள்ளார்.