பிரான்ஸில் அதிகரிக்கும் எரிவாயு கட்டணம்: பாவனை குறைவடையும் சாத்தியம்

OruvanOruvan

Gas bills to increase in France

பிரான்ஸில் உள்ள குடும்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டண அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டிவரும் என அந்த நாட்டு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எரிவாயு கட்டணம் 5.5 முதல் 10.4 வீதம் அதிகரிக்கும் என எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 5.5 வீத அதிகரிப்பு என்பது தமது வீட்டை சூடு படுத்துவதற்காக எரிவாயுவை பயன்படுத்தும் சராசரி பாவனையாளருக்கு மாதமொன்றுக்கு 7.30 யூரோ மேலதிக செலவாக மதிப்பிடப்படுகிறது. இந்த தொகையானது வருடத்திற்கு 87.60 யூரோ கட்டண அதிகரிப்பாகும்.

வெந்நீர் மற்றும் சமையலுக்கு மாத்திரம் எரிவாயுவை பயன்படுத்துபவர்களுக்கு, எரிவாயு கட்டணமானது 10.4 வீதம் அதிகரிக்கும் நிலையில், மாதம் 2.20 யூரோ மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த தொகையானது வருடத்திற்கு 26.40 யூரோ அதிகரிப்பாகும்.

இருப்பினும், இந்த கட்டண அதிகரிப்பானது எரிவாயு பயன்பாட்டை குறைப்பதற்கான சாத்தியத்தினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் எரிவாயு கட்டணம் அதிகரிக்கும் என மக்கள் அச்சமடைகின்ற போதிலும், அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் எரிவாயு ஒரு அலகுக்கான விலை வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சிக்கும் எரிவாயு பாவனை குறைவடைந்தமைக்கும் பாரிய தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, எரிவாயுவை குறைவாக பயன்படுத்துவதால் பராமரிப்பு செலவு குறைந்த பாவனையாளர்களிடையே பகிரப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

இதேநேரம், மின்சார கட்டணமும் இம்மாதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

67.75 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட பிரான்ஸில் 125,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த நிலையில், குறித்த கட்டண அதிகரிப்பு இவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கும்.