பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்காக உளவு பார்த்த இந்தியர் கைது: மொஸ்கோவில் இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர்

OruvanOruvan

Satyendra Siwal NDTV

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சு ஊழியர் ஒருவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சத்யேந்திர சிவால் என்ற இந்த நபரல், இந்திய தூதரகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இந்திய இராணுவ கட்டமைப்புகள் தொடர்பான இரகசியத் தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வாளர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சத்யேந்திரா என்ற இந்த ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள இந்தியத் தூதுரகத்தில் பணியாற்றியுள்ளார்.சந்தேக நபர் உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டம், ஷாமகியுதீன்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் என உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மீரட் நகரில் சத்யேந்திரா கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் போது தான் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்காக வேலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் பல அடையாள அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சத்யேந்திரா கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மொஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.