ஒசாமா குறித்து அதிர்ச்சித் தகவல்: பல வருடங்களின் பின் வாய் திறந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

OruvanOruvan

Osama bin Laden and Yusuf Raza Gilani

2011 இல் அமெரிக்கா படையினரால் கொல்லப்படுவதற்கு முன்பே, அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததாக அமெரிக்கா தெரிவித்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பெப்ரவரி 08 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜியோ செய்திச் சேவையுடனான செவ்வியின் போது, இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி (Yusuf Raza Gilani) வெளியிட்டார்.

முன்னாள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் காண்டலீசா ரைஸ் (Condoleezza Rice) பாகிஸ்தானுக்கான விஜயத்தின் போது இந்த தகவலை தன்னிடம் கூறியதாக யூசுப் ரசா கிலானி குறிப்பிட்டார்.

2008 முதல் 2012 வரை யூசுப் ரசா கிலானி பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்த போது, அமெரிக்க வெளிவிவகார அமைச்சராக இருந்த காண்டலீசா ரைஸ் நான்கு முறை பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிலானியின் கூற்றுப்படி, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், கடந்த 2008 டிசம்பர் முதல் வாரத்தில், இஸ்லாமபாத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போது ரைஸ், கிலானியை சந்தித்துள்ளார்.

இதன்போது, "ரைஸ் மேற்கண்ட விடயத்தை தன்னிடம் பகிர்ந்து கொண்ட போது, அது தவறான தகவல் என்று நான் கூறினேன்" என்று கிலானி ஜியோ செய்திச் சேவையிடம் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ மூலம் இந்த தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக ரைஸ் கூறியதாகவும் கிலானி தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பேசிய கிலானி, பின்லேடனின் கொலைக்குப் பின்னர், அல்-கொய்தா தலைவர் தனது நாட்டில் பதுங்கி இருப்பது பற்றி தனக்குத் தெரியாது என்று திட்டவட்டமாக மறுத்தார்.

ஒபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்

2011 மே 2 அன்று பாக்கிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் அமெரிக்க இராணுவ சிறப்பு நடவடிக்கைப் பிரிவினரால் ஒசாமா கொல்லப்பட்டார்.

'ஒபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்' (Operation Neptune Spear) என்ற பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால் உத்தரவிடப்பட்டது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதலின் மூளையாக ஒசாமா செயற்பட்டார் என்று மிகவும் பரவலாக அறியப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.