கனேடியர்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு இடமில்லை: பள்ளிவாசல் மீதான தாக்குதலை கண்டித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ

OruvanOruvan

Canadian Prime Minister Justin Trudeau

ஒண்டாரியோ மாநிலத்தின் மிசிஸ்சாகுவா நகரப் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டித்துள்ளார்.

அந்தச் சம்பவம் வெறுப்புணர்வுக் குற்றமாக விசாரிக்கப்படும் வேளையில், அது நாட்டில் இஸ்லாமிய சமயத்துக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பதைக் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துரைத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பள்ளிவாசலின் ஜன்னல் வழியே யாரோ இரு பாறைகளை வீசியதாகக் பொலிஸார் கூறியது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று சிபிசி செய்திசேவை தெரிவித்தது.

இந்நிலையில், இஸ்லாமிய சமயம் மீதான வெறுப்புணர்வுக்குக் கனேடிய சமுதாயத்தில் இடமில்லை என்று பிரதமர் ட்ரூடோ, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“2017ஆம் ஆண்டு கியூபெக் நகரப் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தக்க்குதல் மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை தேசிய அளவில் நினைவுகூரும் நாளில், மிசிஸ்சாகுவா பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இஸ்லாம் மீதான வெறுப்புணர்வு அபாயகரமான அளவில் அதிகரிப்பதை இந்தத் தாக்குதல் காட்டுகிறது என்று கனேடிய முஸ்லிம்களுக்கான தேசிய மன்றம் தெரிவித்துள்ளது. இதேவேளை காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலாக போர் தொடங்கியதிலிருந்து கனடாவில் முஸ்லிம் வெறுப்புணர்வைக் காட்டும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.