ஐரோப்பிய பாராளுமன்றம் மீது முட்டை வீச்சு: 90 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

OruvanOruvan

Fires erupt as farmers protest outside European Parliament

ஐரோப்பிய பாராளுமன்றம் பலத்த அடிவாங்கியுள்ளது. இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரான்ஸ விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் இரண்டு வாரங்களை அண்மித்துள்ளது. சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பிரான்ஸின் செயற்பாடுகளை முடக்கும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மீது நேற்று முட்டை மற்றும் கற்களை எரிந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். பாராளுமன்ற வளாகத்தில் தீமூட்டி பட்டாசு வெடித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் விவசாயிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

அதிகரித்து வரும் செலவுகள், அதிகப்படியான கட்டுப்பாடு மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் - ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏற்றுமதி நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மை நியாயமற்ற போட்டிக்கு வழிவகுப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரின் தகவலின் படி, சுமார் 1300 இற்கும் மேற்பட்ட டிராக்டர்களை பயன்படுத்தி பிரதான வீதிகள் அனைத்தும் மூடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பாரிஸ், லியோன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களுக்கு பிரவேசிப்பதற்கான வீதிகளை விவசாயிகள் முற்றுகை இட்டுள்ளனர். பாரிஸின் மிக முக்கிய மொத்த விற்பனை சந்தை வளாகத்திற்குள் புகுந்த பெருமளவான விவசாயிகளை பிரான்ஸ் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இருப்பினும், பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி சில விவசாயிகள் பாரிஸுக்கு வெளியே உள்ள ருங்கிஸ் மொத்த சந்தையில் ஒன்றுகூடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 90 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.