செங்கடலில் பயணிக்கும் அமெரிக்காவின் கப்பல்களை அழிப்போம்: புதிய அறிவிப்பை வெளியிட்ட ஹூதிகள் ; அதிகரித்தது பதற்றம்

OruvanOruvan

செங்கடலில் ஹூதிகள் கிளர்ச்சியாளர்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் அதன் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹூதிகள் எச்சரித்துள்ளனர்.

யேமனின் ஈரானுடன் இணைந்த ஹூதிகள் செங்கடலில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்க்கப்பல்களைத் தொடர்ந்து குறிவைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர், அல்-மஸ்சிரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கிரேவ்லி (USS Gravely) மீது ஹூதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்தியதாக செங்கடலில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு இராணுவம் தெரிவித்துள்ளது.

யேமனின் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதிகள், காசா போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடல் மற்றும் அதன் ஊடாக பயணிக்கும் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், ஹூதி கிளர்ச்சியாளர்களை பயங்கரவாதிகளாகவும் அறிவித்துள்ளனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் அறிவிப்பால் செங்கடலில் எதிர்வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.