பிரான்ஸில் கருக்கலைப்பு உரிமை: அரசியலமைப்புச் சட்டத்தில்
பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்திலேயே கருக்கலைப்பை மகளிர் உரிமையாக உறுதிப்படுத்தும் சட்ட முன்வரைவு, பிரான்ஸ் தேசிய அவையில் (பாராளுமன்றம்) நேற்று செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இதை அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்வதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் உறுதியளித்திருந்தார்.
பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தில் 34-வது பிரிவில் மகளிருக்கான கருக்கலைப்பு உரிமையை இடம் பெறச் செய்யும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று மேக்ரான் அரசு கருதுகிறது.
இத்தகைய திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனிச் சிறப்பு அமர்விலும் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாகவே தேசிய அவை வாக்களிக்கும்.
பிரான்ஸின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் திருத்தம் எளிதில் நிறைவேற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் முடிவைத் தனித்தவொன்றாகக் கருத முடியாது. இந்தப் போக்கு பரவக்கூடிய நிலையில் இத்தகைய சட்டத் திருத்தம் அவசியம் என்றும் முன்வரைவின் அறிமுகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.