சென்னைக்கு மீண்டும் விமானச் சேவை: ஆரம்பித்த இரண்டு நாடுகள் ; மகிழ்ச்சியில் மாணவர்கள்

OruvanOruvan

TAGonsalves

ஹாங்காங், மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் சென்னைக்கான விமானச் சேவைகள் கொரோனா தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

தொற்றுக் காலத்திற்குப் பிறகு பல நாடுகள் விமானச் சேவைகளை தொடங்கினாலும் ஹாங்காங், மொரீஷியஸ் நாடுகளின் சென்னைக்கான விமானச் சேவைகள் மட்டும் தொடங்கப்படாமல் இருந்தன.

சென்னை - ஹாங்காங் நாடுகளுக்கிடையே விமானச் சேவை அளித்து வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நான்காண்டுகளுக்குப் பின் மீண்டும் வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து சேவையைத் தொடங்கவுள்ளது.

முதல் கட்டமாக வாரம் 3 நாள்கள் மட்டும் இயக்கப்படும். பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து நாள்தோறும் இயக்கப்படும் என்று தெரிகிறது. ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு, இந்தச் சேவை இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது.

இதேபோல் சென்னையில் இருந்து மொரீஷியஸ் நாட்டிற்கு, ஏர் மொரீஷியஸ் விமானச் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளன. வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாள்கள் இயக்கப்பட்ட இந்த விமானச் சேவைகள், தொற்றுக் காலத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த விமானச் சேவையை வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொரீஷியஸில் ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்கின்றனர்.

நேரடி விமானச் சேவை முடங்கியதால் அந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரீஷியஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தமை குறிப்பிடத்தக்கது.