ஜோர்தானில் அமெரிக்க படையினர் கொல்லப்பட்ட சம்பவம்: ஜோ பைடனுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் அதிகரிப்பு

OruvanOruvan

US President Joe Biden

ஈரானின் ஆதரவோடு இயங்கி வரும் போராளிகள் ஜோர்தானில் உள்ள அமெரிக்க முகாம் மீது நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 28 ஆம் திகதி நடந்த அந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஈரானுக்கு நேரடியாக ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுக்குமாறு பைடனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் மத்திய கிழக்கு நடந்து வரும் போர் பிராந்தியத்தில் ஏனைய இடங்களுக்கு பரவக்கூடாது என்பதற்காக அவ்வாறான நடவடிக்கை எடுக்க பைடன் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

பைடன் ஈரானுக்கு எதிராக ஏதேனும் ஒரு நடவடிக்கையை எடுத்தால், அந்நாட்டு வெளியிலும் உள்நாட்டிலும் செயற்படும் அமெரிக்க படையினர் இலக்கு வைக்கப்படக்கூடும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

OruvanOruvan

US Army Base in Jordan

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகள் அமைப்புக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

அப்போது முதல் ஈராக், சிரியா, ஜோர்தான், யேமன் கடற்கரை அருகில் உள்ள பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்கப் படையினர் மீது 150 முறைக்கு மேல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 28 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அமெரிக்க படையினர் கொல்லப்படவில்லை. அந்த தாக்குதல்களில் பலர் காயமடையவுமில்லை.

வடகிழக்கு ஜோர்தானில் சிரியாவுடனான எல்லையில் அமைந்துள்ள டவர் என்ற இடத்தில் இருக்கும் அமெரிக்க படை முகாம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என பைடன் தெரிவித்திருந்த போதிலும் மேலதிக விபரங்கள் எதனையும் அவர் வழங்கவில்லை.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை காரணம் காட்டி குடியரசுக் கட்சியினர் ஜனாதிபதி பைடனை விமர்சித்து வருகின்றனர்.