காஸாவில் முழுமையான போர் நிறுத்த வேண்டும்: ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி

OruvanOruvan

Gaza Strip AFP

காஸாவில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாலஸ்தீன போராளிகள் அமைப்பான ஹமாஸ் கேட்டுக்கொண்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக போர் நிறுத்தத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கத்தார் கூறியுள்ள நிலையில்,ஹமாஸின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

நாங்கள் முழுமையான போர் நிறுத்தத்தைப் பற்றிப் பேசுகிறோம். தற்காலிக போர் நிறுத்தத்தை பற்றி அல்ல என தாஹிர் அல்-நுனு, என்ற ஹமாஸின் அந்த சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.

போர் நிறுத்தப்பட்ட பின்னர் பணயக்கைதிகளின் விடுதலை உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர் ஆரம்பித்த பின்னர், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து கத்தார் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் பில் பர்ன்ஸ், இஸ்ரேல் மற்றும் எகிப்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த கூட்டங்களில், கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் போர் நிறுத்தத்திற்கான பொறிமுறை பரிந்துரைக்கப்பட்டதாக கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.

இந்த பரிந்துரை குறித்து ஹமாஸ் அமைப்பிற்கு தெரிவித்து, அவர்களை ஆக்ககரமான முறையில் போர் நிறுத்த செயற்பாடுகளில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் பாரிஸில் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த யோசனை தொடர்பான பரிந்துரையை கத்தாரிடம் இருந்து ஹமாஸ் பெற்றுக்கொண்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.