ஈரான் எல்லையில் 9 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை: குற்றவாளிகளை தேடும் ஈரான் பொலிஸார்

OruvanOruvan

Iran and Pakistan Border

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சரவணில் கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை எந்த தனிநபரோ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை என ஈரான் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள ஈரானின் தென்கிழக்கு எல்லைப் பகுதியில் சனிக்கிழமை இனந்தெரியாத ஆயுததாரிகள் 9 பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாக்குதல் குறித்த தகவல் வெளியானதும், ஈரானில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பியோடிய மூன்று துப்பாக்கிதாரிகளை பொலிஸார் தேடி வருவதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சரவணில் ஒன்பது பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் இழப்பிற்கு தூதரகம் இரங்கல் தெரிவிப்பதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்து கொள்வதாகவும் இந்த விடயத்தில் ஈரானிடம் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் ஈரானுக்கான பாகிஸ்தான் தூதுவர் மொஹமட் முடாசிர் திப்பு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்தவர்கள் வாகன பழுதுபார்க்கும் இடத்தில் பணிபுரிந்த பாகிஸ்தானிய தொழிலாளர்கள் என பலூசிஸ்தான் மனித உரிமைகள் குழுவான ஹல்வாஷ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.