சூடானில் 52 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இனக்கலவரம்
சூடானின் அபேய் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் ஐ.நாவின் இடைக்கால படையின் வீரர் உட்பட 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சூடான் தகவல் துறை அமைச்சர் புல்லிஸ் கோச் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் 64 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை எனவும் காணி பிரச்சினையின் பின்னணியில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் நூர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அதிகளவில் ஆயுதங்களை கொண்டுள்ளவர்கள் எனவும் அமைச்சர் கோச் கூறியுள்ளார்.
இந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சூடானின் வார்ராப் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் சூடானில் இனக்கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அபேய்க்கான ஐக்கிய நாடுகளின் இடைக்கால படையின் வீரரின் மரணத்திற்கு காரணமாக இந்த வன்முறையை இடைக்கால படையின் அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
அபேயின் பல பகுதிகளில் பழங்குடி இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அபேய்க்கான ஐநாவின் இடைக்கால படை உறுதிப்படுத்தியுள்ளது.
சூடான் மற்றும் தென் சூடான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரண்டு நாடுகளும் விரும்புகின்றன.
கடந்த 2011 ஆம் ஆண்டு சூடானில் இருந்து தென் சூடான் சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
ஆப்பிரிக்க ஒன்றியம் அபேய் உரிமை தொடர்பில் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது.
ஆனால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
அபேய் தற்போது தென் சூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது. மார்ச் மாதம் தென் சூடான் தனது படைகளை அபேய்க்கு அனுப்பியதில் இருந்து இருநாடுகளின் எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன.