சில நாடுகள் ஐநா அமைப்புக்கு வழங்கும் நிதியுதவிகளை நிறுத்தியுள்ளன: ஊழியர்களுக்கு ஹமாஸூடன் தொடர்பு என குற்றச்சாட்டு

OruvanOruvan

Gaza Strip

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் ஐநா அகதிகள் அமைப்பின் (UNRWA) ஊழியர்கள் சிலருக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ஆறு ஐரோப்பிய நாடுகள் ஐ.நா. அகதிகள் நிறுவனத்திற்கு வழங்கும் நிதியுதவிகளை நிறுத்தியுள்ளன.

பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து, பின்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் காஸாவில் உள்ள அகதிகளுக்கு ஆதரவளிக்கும் ஐநா அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்தியுள்ளன.

காஸாவில் உள்ள இஸ்லாமிய போராளிகளுடன் UNRWAக்கு தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

காஸாவின் மறுசீரமைப்புக்கு உண்மையான அமைதி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் முகவர் அமைப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஐநா பிரதிநிதி ஃபர்ஹான் ஹக் பதிலளித்துள்ளார். UNRWA தனது சேவையில் சிறந்த சாதனை படைத்துள்ளது.

இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சரின் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளால் முகவர் அமைப்புக்கு நிதி வழங்குவதை நிறுத்துவது சரியான செயல் அல்ல.தவறுகள் குறித்து விசாரணை நடத்துவதே சரியான நடவடிக்கை எனவும் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு இந்த மேலதிக தண்டனை தேவையில்லை என ஐநா அகதிகள் முகவர் அமைப்பின் ஆணையாளர் ஜெனரல் பிலிப் லஸ்ஸரினி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தனது அமைப்பை இழிவுபடுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில ஊழியர்களின் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் என்ற நாடு உருவாக வழிவகுத்த 1948 போரின் போது அகதிகளுக்கு உதவ UNRWA உருவாக்கப்பட்டது. காஸா, மேற்குக்கரை, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் காஸாவில் உள்ள 2.3 மில்லியன் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது.