மனித உடற்பாகங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பெண்: அமெரிக்காவின் புறூக்ளினில் நடந்த சம்பவம்

OruvanOruvan

human organs in Refrigerate

அமெரிக்காவின் நியூயோர்க் புறூக்ளின் என்ற பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் தனது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் மனிதத் தலையும் உடற்பாகங்களும் அடங்கிய பைகளைத் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

45 வயதான ஹெதர் ஸ்டைன்ஸ் என்ற அந்த பெண்ணின் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஒரு கறுப்பு நிறப் பையில் மனிதத் தலை போன்ற ஒன்றைக் கண்டதாக ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் மனித உடற்பாகங்கள் அந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறூக்ளின், ஈஸ்ட் ஃபிளட்புஷ் என்ற பகுதியில் உள்ள தொடர்மாடி வீட்டிற்கு கடந்த 22ஆம் திகதி காலை 7 மணிக்கு பொலிஸார் சென்ற போது, ஸ்டின்ஸ் என்ற அந்த பெண் தனியாக இருந்துள்ளார்.

குளிர்சாதனப் பெட்டி செலோ டேப்புகளால் சுற்றப்பட்டிருந்தாகவும் அதனை திறக்க வேண்டாம் என அந்தப் பெண் மன்றாடியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மனித உடற்பாகங்கள் குளிர்சாதனப் பெட்டிக்குள் சில மாதங்களாகவே இருப்பதாகவும் அவை கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு சண்டையில் தனது கணவரால் கொல்லப்பட்டவரின் உடற்பாகங்கள் எனவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளதுடன் அந்த கொலையை தான் நேரில் பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர் கௌஷீன் கெல்ஸர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நேற்று (26) வரை மரணத்துக்கான காரணத்தை நியூயோர்க் நகர சட்டவைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவிக்கவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் ஸ்டைன்ஸ், மனித உடலை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக கடந்த 22ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது கணவர் பற்றிய விபரங்கள் தெரியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்