பிலிப்பைன்ஸில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவானவர்கள்
ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத குழுவினருக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் தௌலா இஸ்லாமியா தீவிரவாத குழுவைச் சேர்ந்த ஒன்பது பேரை சுட்டுக் கொன்றதாக பிலிப்பைன்ஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் இரண்டு பேர் பிலிப்பைன்ஸின் மராவியில் நடந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக உடற்பயிற்சிக் கூடத்தில் கத்தோலிக்க வழிபாட்டின்போது டிசம்பர் மாதம் இ்நத தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பிலிப்பைன்ஸின் தென் பிராந்தியத்தில் அமைந்துள்ள லானோ டெல் சுர் மாகாணத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் இன்று அறிவித்துள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கையின்போது நான்கு இராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் ஆபத்தான நிலைமையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.