டிரம்புக்கு முதல் வெற்றி: சிக்கலை ஏற்படுத்தியுள்ள இரண்டு மாநிலங்கள்

OruvanOruvan

அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இதனால் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது யார்? என்பதற்கான தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நான்கு பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தேர்தலுக்கான நாள் நெருங்கி வந்த நிலையில் டொனால்டு டிரம்புக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என விவேக் ராமசாமி அறிவித்து ஒதுங்கிக் கொண்டார். இதனால் மூன்று பேருக்கு இடையில் போட்டி நிலவியது.

டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாத்தில் ஈடுபட அவருக்கு எதிராக ரான் டி சான்டிஸின் தேர்தல் பிரசாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் சான்டிஸும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இதனால் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் முன்னிலைப் பெற்று வந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.

இது அவருக்கான முதல் வெற்றியாக கருதப்படும் நிலையில், நிக்கி ஹாலேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட இரண்டு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.