கனடாவில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய விதிமுறை: சர்வதேச மாணவர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்

OruvanOruvan

கனேடிய அரசாங்கம் எதிர்வரும் இரு வருடங்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச மாணவர்களின் வருகை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மைக்காலமாக கனடாவில் சர்வதேச மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது, இது கனேடிய அரசாங்கத்திற்கு பெரும் சவாலை வழங்கியுள்ளது.

எனவே எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கும் கனடாவிற்கு வரும் சர்வதேக மாணவர்களின் வருகையினை 35 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான புதிய சர்வதேச மாணவர்களின் வருகையானது 360,000ஆக குறைக்கப்படவுள்ளது.

புலம்பெயர் மாணவர்கள் கனடா நாட்டின், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் பெரிதும் பங்காற்றி வந்துள்ளார்கள்” எனவும் தெரிவித்தார்.

மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

அண்மைய காலமாக கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து அங்கு இருப்பிடங்களுக்கான பற்றாக்குறை மற்றும் வீட்டு வாடகை என்பன அதிகரித்தன. இதன்காரணமாக வெளிநாட்டு மாணவர்களுக்கு இரு வருட விசா வரம்பை கனாடா அறிவித்தது.

கடந்த ஆண்டு மாத்திரம் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு கல்விக்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த தொகையானது கடந்த ஒரு தசாப்தத்திற்க முன்னர் வழங்கப்பட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்

கனடாவின் சில கல்வி நிறுவனங்கள், தமது வருமானத்தை அதிகரிப்பதற்காக அண்மைக்காலமாக அதிகளவிலான சர்வதேச மாணவர்களை அனுமதித்து வருகின்றன.

இதில் பல மாணவர்கள் தமது கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்ய தேவையான வசதிகள் இன்றி கனடாவுக்கு வருகை தருவதால் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும், தொடர்ச்சியாக அதிகரிக்கும் சர்வதேச மாணவர்களின் வருகையால், கனடாவில் தங்குமிட வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.