இரண்டு மாத போர் நிறுத்த யோசனையை முன்வைத்துள்ள இஸ்ரேல்: அனுசரணையாளர்கள் மூலம் ஹமாஸூக்கு அறிவிப்பு

OruvanOruvan

Gaza Strip AFP

காஸாவில் பணயககைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்வதற்காக இரண்டு மாதகால போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும் யோசனையை இஸ்ரேல் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தார் மற்றும் எகிப்திய அனுரணையாளர்கள் மூலம் ஹமாஸ் அமைப்புக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போர் நிறுத்த உடன்பாடு பல கட்டங்களை உள்ளடக்கியது என பெயரை வெளியிடவிரும்பாத இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள், 60 வயதை கடந்த ஆண்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது உடன்படிக்கையின் ஒரு அங்கமாகும்.

இதனையடுத்து இஸ்ரேல் படையின் படை வீரர்கள்,வீராங்கனைகள், இளைஞர்கள் மற்றும் உயிரிழந்த பணயக்கைதிகளின் சடலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் யோசனை முன்வைத்துள்ளது.

அதனை தொடர்ந்து படைவீராங்கனைகள், இளையர்கள், படைவீரர்கள் மற்றும் பிணைக்கைதியாக இருந்து உயிரிழந்தோரின் சடலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது இஸ்ரேலின் ஒப்பந்த யோசனை.

அதேவேளை இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் உடன்படிக்கையில் குறிப்பிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் விடுதலை செய்யப்படும் பாலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கை குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இந்த யோசனையில் போரை நிறுத்துவதற்கான எந்த உறுதிமொழியும் உள்ளடக்கப்படவில்லை.

மேலும் காஸாவில் முக்கிய நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கையை குறைக்கவும் வடபகுதியில் இருந்து வெளியேறிய பாலஸ்தீன மக்கள் படிப்படியாக திரும்பி வரவும் இந்த உடன்படிக்கை வழிவகுக்கும் எனவும் இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், காஸாவின் தென்பகுதி நகரான கான் யூனிஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் மருத்துவப் பணியாளர்களையும் கைது செய்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, வைத்தியசாலையில் உள்ள அப்பாவி மக்களையும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளையும் இஸ்ரேல் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் பல முனைகளில் இருந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.