இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு ஹமாஸ் விளக்கமளித்துள்ளது: தாக்குதலில் தவறுகளும் நடந்ததாக ஒப்புதல்

OruvanOruvan

Gaza Strip AL Jazeera

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன நிலப்பகுதிகளில் இருந்து அவர்களை விரட்டியடிக்கவே கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் கைது செய்து தடுத்து வைத்துள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யும் நோக்கிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பல இஸ்‌ரேலியர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றது.

இதனையடுத்து ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பமானது.காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறார்கள் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலின்போது சில தவறுகள் நடந்துள்ளதாக ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்‌ரேலின் பாதுகாப்பு மற்றும் இராணுவக் கட்டமைப்பு மிக விரைவாக முறியடிக்கப்பட்டதும் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட குழப்பங்களும் இதற்கு முக்கிய காரணம் எனவும் ஹமாஸ் கூறியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 140 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்களில் 132 பேர் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.