வேல்ஸ் வாகன தரிப்பிடத்தில் கைவிடப்பட்ட ஆறு கால் நாய்: புதிய பயணம் ஆரம்பம்

OruvanOruvan

Dog with six legs

ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வேல்ஸ் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி வாகன தரிப்பிடத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு கால்களைக் கொண்ட நாயொன்றுக்கு அறுவை சிகிச்சை மூலம் மேலதிக கால்கள் அகற்றப்பட்டுள்ளன.

வெறும் 11 வாரங்களையே வயதாகக் கொண்ட ஏரியல் எனும் ஸ்பானியல் வகையைச் சேர்ந்த நாயானது பிறக்கும்போதே பல உடல்நலக் குறைப்பாட்டை கொண்டிருந்தது.

இந்த நிலையிலே உரிமையாளர்களினால் கைவிடப்பட்ட குறித்த நாய் சமூக நல அமைப்பினால் (Greenacres Rescue) கண்டெடுக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த நாயை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் தேவதையின் சிறகுகளை போன்று மேலதிகமாக இரண்டு கால்கள் காணப்பட்டமையால், அதனை டிஸ்னி இளவரசியின் பெயரான ஏரியல் என அழைத்தனர்.

இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் உலகெங்கும் உள்ள நலன் விரும்பிகளிடமிருந்து 15,000 பவுண்ட் நிதி திரட்டப்பட்டு ஏரியலின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. அத்துடன், ஏரியலை வளர்ப்பதற்காக குடும்பமொன்றும் முன்வந்துள்ளது.

OruvanOruvan

Dog with six legs

இந்த நிலையில், ஏரியல் மிகவும் நன்றாக இருப்பதாகவும், அது ஒரு அற்புதமான சிறிய வாழ்க்கையை நடத்தப போவதாக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சை நிபுணர் அரோன் லட்ச்மேன் (Aaron Lutchman) தெரிவித்துள்ளார்.

ஏரியல் முழுமையாக குணமடைவதற்கு 10 முதல் 14 நாட்கள் ஓய்வாக இருக்க வேண்டுமென Greenacres Rescue எனும் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏரியலின் உடல்நலம் குறித்து அறிந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருப்பதாக இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் ஏரியல் இந்த வார இறுதியில் மேற்கு வேல்ஸில் உள்ள தமது தற்காலிக வளர்ப்பு குடும்பத்துடன் இணையவுள்ளது. இதன்படி, ஏரியல் ஒரு புதிய வாழ்க்கைக்கு தயாராகியுள்ளது.