ஹமாஸ் விதித்த நிபந்தனைகளை நிராகரித்தார் நெத்தன்யாஹூ: பணயக்கைதிகளை விடுக்கும் சாத்தியமில்லை
இஸ்ரேலுக்கு எதிரான போரை நிறுத்த ஹமாஸ் போராளிகள் அமைப்பு விதித்துள்ள நிபந்தனைகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ நிராகரித்துள்ளார்.
போரை நிறுத்தவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் நிபந்தனைகளை விதித்திருந்தது.
காஸா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேலியப் படையினர் முற்றாக வெளியேற வேண்டும் எனவும் காஸாவின் தமது அமைப்பே அதிகாரத்தில் இருக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், காஸாவின் தென்பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேலியப் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
இஸ்ரேல் தொடர்ந்தும் நடத்தி வருவதன் காரணமாகவும் ஹமாஸ் விதித்த நிபந்தனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாலும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலைமையில், ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகளை ஏற்றால், போரில் இதுவரை கொல்லப்பட்டுள்ள இஸ்ரேலிய படையினரின் மரணத்துக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை போன்ற மற்றுமொரு தாக்குதல் ஏன் மேற்கொள்ளப்படாது என்ற கேள்வியும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், ஹமாஸ் அமைப்பை முற்றாக அழித்து, பணயக்கைதிகளை மீட்பதே தமது இலக்கு எனவும் நெத்தன்யாஹூ குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பணயமாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் கடும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.