பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்: சிறுவர்கள் இருவர் பலி
பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன்,மூன்று பேர் காயமடைந்திருப்பதாக பாகிஸ்தான் ஊடாகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் பாகிஸ்தானின் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஈரானிய எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக சமூக ஊடகங்கள் வழியாக அறியமுடிகின்றது.
“பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிராக ஈரான் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது. இதனால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படக்கூடும்,” என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமானி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.