உக்ரை - சுவிட்சர்லாந்து இடையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டம்: பெப்ரவரியில் அமைதியை ஏற்படுத்தும் உச்சிநிலை கூட்டம்

OruvanOruvan

உக்ரேன் அமைதித் திட்டத்திற்கு உதவும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரேனும் சுவிட்சர்லாந்தும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தை நடத்த உள்ளன.

ஆலோசனைக் கூட்டத்தில் 120 தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்பார்கள் என்று சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது.

சுவிஸ் உல்லாச பொழுதுபோக்கு நகரான டாவோஸில் அந்தக் கூட்டம் நடக்க உள்ளது. உலகப் பொருளியல் கருத்தரங்கும் மறுநாள் அதே நகரில் நடக்கிறது.

உக்ரேனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நான்காவது முயற்சி இது. இதற்கு முன்னர் கோபன்ஹேகனிலும் ஜெட்டாவிலும் அமைதி முயற்சி கூட்டங்கள் நடைபெற்ற பின்னர் ஒக்டோபர் மாதம் மால்டாவில் அதேபோன்ற கூட்டமொன்று நடைபெற்றது.

இந்நிலையில், உக்ரேன் வகுத்துள்ள 10 அம்ச அமைதித் திட்டத்திற்கு ஆதரவை திரட்ட இந்த உச்சநிலைக் கூட்டம் அவசியம். உக்ரேன் ஜனாதிபதி வெலாடிமிர் ஸெலென்ஸ்கி 2022 டிசம்பரில் ஏற்படுத்திய வரைவுத் திட்டமே இது.

திட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துவது தொடர்பான முடிவை எடுக்க இருக்கும் உச்சநிலைக் கூட்டம் 2024 பிப்ரவரியில் நிகழக்கூடும் என்று கீவ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பெப்ரவரியில் நடைபெறும் உச்சநிலை கூட்டத்திற்கு முன்னதாகவே சுவிட்சர்லாந்துடன் உக்ரைன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தை நடத்துகிறது.