அவுஸ்திரேலியாவில் இறுக்கமடையும் விசா கட்டுப்பாடு: இலங்கையர்களும் பாதிப்பு
சர்வதேச மாணவர்கள் மற்றும் குறைந்த திறன்கொண்ட தொழிலாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டு புலம்பெயர்தோரை உள்ளீர்க்கும் அளவும் பாதியாக குறையும் என அந்நாட்டு அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்புகளை அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் 2022-23 காலப்பகுதியில் நிகர வெளிநாட்டவர் குடியேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 510,000 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 202-24 மற்றும் 2025-26 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த எண்ணிக்கையை கால் மில்லியனாக குறைப்பதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இடம்பெயர் அமைப்பில் சிறந்த சமநிலையை பேண நாங்கள் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்து வருவதாக உள்துறை அமைச்சர் கிளேர் ஓ'நீல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் திருத்தங்கள் வெளிநாட்டு இடப்பெயர்வு மீது அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன.
புதிய கொள்கைகளின் கீழ், சர்வதேச மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வுகளில் அதிக மதிப்பீடுகள் தேவைப்படும் எனவும் மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்கும் அமைப்புகளையும் இது முடிவுக்குக் கொண்டுவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிகவும் திறமையான தொழிலாளர்களுக்கான புதிய சிறப்பு விசா, கடுமையான போட்டிக்கு மத்தியில் சிறந்த புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்துவதற்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விசா கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையர்களும் பாதிக்கப்பட கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து அதிகளவான மாணவர்கள் உயர் கல்விக்காக அவுஸ்திரேலியா செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.