காஸாவிற்கு மனிதாபிமான உதவி: இரண்டாவது எல்லைப்பகுதியைத் திறக்க இணக்கம் வெளியிட்ட இஸ்ரேல்

OruvanOruvan

Alexander Ermochenko

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மனிதாபிமான உதவிகளுக்காக இரண்டாவது எல்லைப்பகுதியைத் திறக்க இஸ்ரேல் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

இருப்பினும், காஸா மக்களுக்கு உதவி சென்றுசேர்வதில் சிக்கல் நிலைமை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது எல்லைப்பகுதியைத் திறக்க வேண்டும் என அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.

கெரெம் ஷலோம் என்ற எல்லைப்பகுதியைத் திறக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இஸ்ரேல், காஸா மற்றும் எகிப்து ஆகியவற்றை ஒட்டியே கெரெம் ஷலோம் உள்ளது.

சுமார் இரு மாதங்களுக்கு முன் போர் தொடங்கியபோது குறித்த எல்லை பகுதி மூடப்பட்டது.

கொண்டுவரப்படும் உதவிப்பொருள்களைச் சோதிப்பதற்கே கெரெம் ஷலோம் பகுதி திறக்கப்படும் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் தற்போது மனிதாபிமான உதவிக்காக கெரெம் ஷலோம் பகுதியை திறக்க இஸ்ரேல் இணங்கியுள்ளது.