பிரித்தானிய வரலாற்றில் மிக மோசமான குற்றவாளி; 33 வயதான செவிலியருக்கு அரிய ஆயுள் தண்டனை: முதல் ஐந்து கொலைகள் அனைத்தும் ஜூன் மற்றும் அக்டோபர் 2015 க்கு இடையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

Lucy Letby

பிரித்தானிய வரலாற்றில் மிக மோசமான குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் 33 வயதான லூசி லெட்பிக்கு மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

செவிலியலரான லூசி லெட்பி அவர் பணியாற்றிய வைத்தியசாலையில் புதிதான பிறந்த ஏழு குழந்தைகளை கொலை செய்தமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் ஆறு குழந்தைகளை கொலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜஸ்டிஸ் கோஸ் வழங்கிய இந்த தண்டனை ஒரு அரிய ஆயுள் தண்டனையாகும்.

இந்த ஆயுள் தண்டனை வழங்கப்படுவதால் லூசி லெட்பி வாழ்நாள் முடியும் வரை எந்த வகையிலும் விடுவிக்க முடியாது என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

பிரித்தானியாவில் இந்த தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உயிருடன் உள்ளவர்கள் மூவர் மட்டுமே இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2015 மற்றும் 2016 க்கு இடையில் லூசி லெட்பி இந்த குழந்தைகளைக் கொலை செய்துள்ளார். கொல்லப்பட்ட குழந்தைகளில் ஐந்து ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லூசி லெட்பி மற்ற குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்திருக்கலாம் என பொலிஸார் அச்சம் வெளியிட்டதுடன், அந்த வைத்தியசாலையில் அசாதாரண சம்பவங்களுக்கு முகம் கொடுத்த மேலும் 30 குழந்தைகளை அடையாளம் காண முடிந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல் ஐந்து கொலைகள் அனைத்தும் ஜூன் மற்றும் அக்டோபர் 2015 க்கு இடையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லூசி குறித்த எச்சரிக்கைகள் 2016 ஜுன் வரை இந்த கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூசி லெட்பி லிவர்பூல் மகளிர் வைத்தியசாலையில் பணிபுரியும் போதும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன என்றும் தகவல்கள் வெளியாகியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் 2015 க்கு முன்பு, செஸ்டர் வைத்தியசாலையின் கவுன்டெஸ் வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உயிரிழந்தன.

ஆனால் 2015ஆம் ஆண்டு கோடை காலத்தில் அசாதாரணமான உயிரிழப்பு ஒன்று நடந்ததாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிசு மரணங்கள் திடீரென அதிகரித்தது தொடா்பாக பொலிஸார் கடந்த 2017-ஆம் ஆண்டில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணையின்போது, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவக் குறிப்பேடுகளை லூசி லெட்பியின் வீட்டில் இருந்து மீட்ட பொலிஸார், அவற்றில் ‘நான் ஒரு பாவி’, ‘இதற்கு நான்தான் காரணம்’ என்பது போன்ற வாசகங்களை எழுதியிருப்பதைக் கண்டனர்.

இந்நிலையில், லூசி லெட்பி கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதித் தீர்ப்பை நீதிபதிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஏழு சிசுக்களைக் கொன்றது, 6 சிசுக்களைக் கொல்ல முயன்றது ஆகியவை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை லெட்பி மறுத்திருந்தார். லூசி சார்பில் முன்னிலையான அவரது சட்டத்தரணி, லூசி அப்பாவி என்றும், தாழ்வு மனப்பான்மை கொண்ட அவர் சிசுக்கள் மரணத்தை தாங்க முடியாமல் அந்தக் குறிப்புகளை எழுதியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

இந்நிலையில், லூசி மீதான கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.