நிலவின் மேற்பரப்பில் அணுமின் நிலையம்: தீவிர ஆய்வில் ரஷ்யா

OruvanOruvan

A nuclear power plant on the surface of the moon

அண்மைய காலங்களாக நிலவில் பல தரப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் இந்தியா , சீனா , அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

கடந்த வருடத்தில் இந்தியா சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது. இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியது.

உலக நாடுகள் அனைத்தினது கவனமும் தற்போது நிலவின் மீது உள்ளது என கூறினால் அதில் பிழையேதும் இல்லை.

எதிர்வரும் ஆண்டுகளில் நிலவில் குடியேறுவது தொடர்பிலான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் , எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் நிலவின் மேற்பரப்பில் அணுமின் நிலையம் அமைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனத்தின் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.

சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து இத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2033ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த திட்டத்தை நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அணுசக்தியால் இயங்கும் சரக்கு விண்கலத்தை உருவாக்கவும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார் .

இந்த இரண்டு திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தால், நிலவில் குடியேற்றங்களை நிறுவ பெரும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் சீனா இடையே விண்வெளி ஒத்துழைப்பு

2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் , மாஸ்கோவும் பீஜிங்கும் ஒரு சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதன்படி, 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் கட்டுமானத்திற்கான வரைபடத்தை வழங்கியது.

இந்நிலையில் , சீனா தனது சொந்த நிலவு ஆய்வுத் திட்டத்தைக் கொண்டுள்ளது.

ஆளில்லா "சாங்'இ-6" ஆய்வுப் பாறை மாதிரிகளை சேகரிக்க மே மாதம் ஏவப்படவுள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய விண்வெளித் திட்டம் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, கடந்த 47 ஆண்டுகளில் அதன் முதல் சந்திரப் பயணம் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.