ஸ்மார்ட் போன் சந்தையில் புரட்சி: 12 ஆண்டுகளில் சாம்சங்கை முந்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை

OruvanOruvan

GETTY IMAGES

கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்சங் நிறுவனத்தை முதல் இடத்திலிருந்து வீழ்த்தி உலக ஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தற்சமயம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச தரவு கழகத்தின் (IDC) தகவல்களின்படி, ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அதிகளவிலான ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு சந்தைக்கு அனுப்பப்பட்ட ஸ்மார்ட் போன்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் மேலான தொகையினை அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் கொண்டுள்ளது.

ஆப்பிளுக்கு அடுத்த படியாக சாம்சங் 19.4% சந்தைப் பங்கையும் சீனாவின் ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களான Xiaomi, OPPO மற்றும் Transsion ஆகியவை அடுத்தடுத்தம் சந்தைக்கு அதிகளவான ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கொவிட்-19 நோய் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை அடுத்து ஸ்மார்ட் போன் விற்பனையானது தடுமறி வருகிறது.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.2 பில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக IDC தெரிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டை விட 3 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சி என்பதுடன், இது ஒரு தசாப்தத்தில் விற்கப்பட்ட மிகக் குறைந்த தொகையாகும்.

பல நுகர்வோர் பொருளாதார சவால்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்களை எதிர்கொண்டு ஸ்மார்ட் போன் வாங்குவதை குறைத்துள்ளனர்.

எனினும், இந்த ஆண்டு ஸ்ர்மார்ட் போன் சந்தை மீண்டு வளர்ச்சி பெறும் எனறு நிபுணர்கள் கணித்துள்ளனர்.