எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காலி மாவட்ட செயலகம் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
48 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்
பதிவுப் பட்டியலின்படி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்கெண்ணும் பணிகள்,வாக்களிப்பு நிலையங்களிலேயே இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டு தொகுதி ரீதியான முடிவுகள் 17 மத்திய நிலையங்களில் தயாரிக்கப்படுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முடிவுகள் காலி மாவட்ட செயலகத்திக்கு அனுப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் விநியோகம் மற்றும் அதிகாரிகளை அழைத்து செல்லும் நடவடிக்கைகள் நேற்று காலை (25.10.2024) முதல் முன்னெடுக்கப்பட்டன.
48 தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கான அதிகாரிகள் அழைத்து செல்லப்பட்டதுடன் வாக்கு பெட்டிகள் மற்றும் ஆவணங்களும் விநியோகிக்கப்பட்டன.