ஜனாதிபதித் தேர்தல் திகதி: செய்தியாளர் மாநாட்டில் ஆணைக்குழுத் தலைவர் விளக்கம்

OruvanOruvan

Election Commission of Sri Lanka

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் இன்று நள்ளிரவு முதல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தலைமையில் இன்று (16) இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதி சட்டத்தின் பிரகாரம் இந்த நாட்களை பரிசீலிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 4 முதல் 6 வாரங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிதி அமைச்சின் அதிகாரிகள் நாளை (17) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதியைப் பெற்றுக்கொள்வது மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.