13ஆவது திருத்தம் முழு அளவில் நடைமுறையாக்கம்: புதிய அரசமைப்பின் மூலமே தீர்வு ; யாழில் ஜே.வி.பி

OruvanOruvan

"தேசிய இனப் பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவரையில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் முழு நடைமுறையாக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும்."

- இதுவே தங்களின் நிலைப்பாடு என ஜே.வி.பியையும் உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அந்த அமைப்பின் பிரதிநிதிகளும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குழுவினர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளரும் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிட்டார்.

அவர் தெரிவித்தவை வருமாறு:-

"மாகாண சபை முறைமை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை 2019 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தாங்கள் இடம்பெறச் செய்துள்ளனர் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாகாது என்று தமிழர் தரப்பு கூறுவதைப் போலவே, அது தீர்வு அல்ல என்பதைத் தாங்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய அநுரகுமார திஸாநாயக்க, தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு புதிய அரசமைப்பு மூலமே எட்டப்பட வேண்டும் என்றும் சொன்னார்.

அதுவரையில் மாகாண சபை முறைமை நீடிக்க வேண்டும். தாமதிக்காமல் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். 13 ஆம் திருத்தம் மூலம் அரசமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு எந்த வகையில் அமைய வேண்டும், அதை அணுகுவதற்கான படிமுறைகள், பாதைகள் குறித்து எல்லாம் நாங்கள் இருந்து வரையறை செய்து, முடிவுகளை எட்டி, திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.

அந்தப் படிமுறைக்கு அமைய புதிய அரசமைப்பு உருவாக்கத்தையும், அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையும் நாம் எட்ட வேண்டும் என்ற கருத்து நிலைப்பாட்டை அவர்கள் முன்வைத்தனர்.

அவற்றை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பகிரங்க அறிவிப்புக்களிலும் வெளிப்படுத்துங்கள். நாம் பரிசீலித்து உரிய முடிவை எடுப்போம் என்று அவர்களுக்குத் தெரியப்படுத்தினோம்." - என்றார் சுமந்திரன் எம்.பி