சோழன் உலக சாதனை படைத்த ஆறு வயது சிறுவன்: முயற்சிக்கு பாராட்டு

OruvanOruvan

நுவரேலியாவை சேர்ந்த 06 வயது சிறுவன் கல்வி ராஜாங்க அமைச்சர் முன்னிலையில் உடல் உறுப்புகள், தசை நாண்கள் மற்றும் தசைநார்களின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

நூ/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் லவ்வர்ஸ் லீப் பகுதியை சேர்ந்த ஹர்சித் என்ற மாணவனே இந்த உலப சாதனையைப் படைத்துள்ளார்.

கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் முன்னிலையில் வைத்து சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

இதன் போது அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த மனித உடல் உறுப்புகளின் உருவப்படத்திலிருந்த உடல் உறுப்புகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் போன்றவற்றை தொட்டு அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களை தெளிவாகக் கூறினார்.‌

இவருடைய இந்த முயற்சியை கண்காணித்த சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா போன்றோர் உலக சாதனையை உறுதி செய்தனர்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபில் ஹெல்பிங் பீபில் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த உலக சாதனை நிகழ்வை நடாத்தினர்.

சோழன் உலக சாதனை படைத்த ஹர்சித்தைப் பாராட்டிய கல்வி இராஜாங்க அமைச்சர் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கம் போன்றவற்றை மாணவனுக்கு வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், கல்வி இராஜாங்க அமைச்சர் அலுவலகத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷனின் இயக்குநர் க்லாரன்ஸ் சம்மேல் போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த மாணவன் ஹர்சித்தை வாழ்த்திப் பாராட்டினார்கள்.