சூடுபிடிக்கும் தேர்தல் களம்: ஐ.ம.சவின் கூட்டணி நாளை அங்குரார்ப்பணம் -

OruvanOruvan

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் சில அறிவிப்புகளால் பிரதான மற்றும் சிறிய கட்சிகள் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை ஆரம்பித்துள்ளன.

பிரதானக் கட்சிகள் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளுங்கட்சியின் கூட்டணியை அமைக்கும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்-சிங்கள புத்தாண்டின் பின் ஆளுங்கட்சியின் கூட்டணி, தொடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளன. இந்தக் கூட்டணியின் பிரதானக் கட்சிகளாக பொதுஜன பெரமுனவும், ஐ.தே.கவும் இருக்குமென அரசதரப்பு செய்திகள் கூறுகின்றன.

என்றாலும், இன்னமும் இந்தக் கூட்டணி தொடர்பான பேச்சுகள் இறுதியடைவில்லை. ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாதென ஒருதரப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளமையே கூட்டணி பேச்சுகளின் இழுபறிக்கு காரணம்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி பரந்தப்பட்ட கூட்டணியொன்றை கட்டியெழுப்ப உள்ளது.

இதற்கான உடன்படிக்கை நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சி பணியாற்றும் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியில் பங்காளிக் கட்சிகளாக உள்ள கட்சிகள் என பல்வேறு தரப்பினரை இணைத்து இந்த பரந்தப்பட்ட கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.

இந்த கூட்டணியின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைகள் வகுக்கப்பட உள்ளன.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பரந்தப்பட்ட கூட்டணியொன்று அமைக்கப்பட்டு வருகிறது. என்றாலும், இந்தக் கூட்டணியில் அரசியல் கட்சிகள் எதுவும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. மாறாக பல்வேறு சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களுமே இணைத்துகொள்ளப்படுகின்றன.