ரணிலே வேட்பாளர்: ராஜபக்சர் தரப்பு உத்தரவாதம் - “நாமல் விம்பம்“ எதற்கு உருவாக்கப்படுகிறது?

OruvanOruvan

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் எடுத்துரைத்திருந்தார்.

முயற்சியை கைவிட்ட பசில்

எவ்வாறாயினும், அரசியலமைப்பு ரீதியில் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லையென பசிலுக்கு ரணில் பதிலளித்திருந்தார்.

இந்தப் பின்னணியில், அவசர பொதுத் தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பசில் ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்கள் நிறைவேற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் ,அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆதரவை நாடாளுமன்றத்தில் பெற முடியாத காரணத்தினால் அந்த முயற்சியை கைவிட பசில் தீர்மானித்துள்ளார்.

அதேபோன்று ராஜபக்சர்களை காப்பாற்றிய ரணிலை கைவிடுவது ஆபத்தென பசில் தரப்புக்கு ஆலோசனைகளும் கட்சியின் மூத்த உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ளது.

ரணில் தயாராகிவிட்டார்

இதனால் ஜனாதிபதித் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை பசில் விரைவில் எடுக்கக் கூடும் என அறிய முடிவதுடன், ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளார்.

நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்நிறுத்துமாறு கட்சியின் உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அவரை பிரபல்யப்படுத்தவும் 2029 அல்லது 2030இல் ஜனாதிபதித் தேர்தலுக்கு அவரை தயார்படுத்தவாகுமென அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதேவேளை, ரணில் விக்ரமவிங்கதான் தமது வேட்பாளர் என்ற அடிப்படையில் பணிகளை தொடருமாறு ராஜபக்ச தரப்பில் இருந்து உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சித்திரை புத்தாண்டின் பின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ரணில் தயாராகிவிட்டதாகவும் தெரியவருகிறது.