வடக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற அனுர முயற்சி: மறைமுக பேச்சுகள் ஆரம்பம்

OruvanOruvan

Anura Kumara Dissanayaka Photo Credit - Getty Image

ஜனாதிபதித் தேர்தலுக்காக இலங்கைத் தீவில் பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில், அமைச்சரவையில் கருத்து வெளியிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அதேபோன்று ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலப்பகுதயில் நடைபெறும் என பொது வெளியிலும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ள பிரதானக் கட்சிகள் பரந்தப்பட்ட கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி நாளை வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட உள்ளது.

இக்கூட்டணியில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.

இதேதேளை, தேசிய மக்கள் சக்தியும் இம்முறை பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தெற்கில் பொதுவான நிலைப்பாடுகளுடன் இருக்கும் கட்சிகளுடன் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழு பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோன்று வடக்கில் உள்ள சில கட்சிகளுடனும் அனுரவின் குழு மறைமுக பேச்சுகளில் ஈடுபட்டுள்ளது. தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை பேசும் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

விரைவில் இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என அறிய முடிகிறது.