கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - east news Updates 04.04.2024

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. அகழ்வு பணியினை தொடர இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை எனவும் அகழ்வுப்பணிக்கு என்று ஒதுக்கப்பட்ட பாதீடு அதிகமாக காணப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் நீதிமன்றில் தெரிவித்தார். இந்நிலையில் பாதீடு சீர்செய்து அனுப்பி நிதியினை பெறுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது அத்தோடு குறித்த வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மன்னாரில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம்

உலக உணவு திட்டத்தின் நிதி பங்களிப்புடன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனினால் மன்னார்- மாந்தை, குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவில் இருந்து இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்த மூவர் கைது

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்ட விரோதமாக மாடுகள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றி வளைப்பின்போது மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

OruvanOruvan

யாழ் மத்திய பேருந்து நிலைய நெருக்கடியை நீக்க நடவடிக்கை


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிலவும் நெருக்கடி நிலமைகளை நீக்குவதற்கும் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். பேருந்து நிலையத்திற்கு நேற்றைய தினம் நேரடி விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள நிலமைகளை நேரில் அவதானித்ததுடன் பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

OruvanOruvan

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

OruvanOruvan

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் தப்பியோட்டம்

மன்னாரில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் தப்பி ஓடியுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (03) காலை தப்பியோடியுள்ளார்.

இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு

இலங்கை ஊடகத்துறையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றிய நடேசு ஜெயவானுஜன் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

OruvanOruvan

தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

வடமாகாண பிரதம செயலாளர் இந்திய உதவித்துணைத்தூதுவர் சந்திப்பு!

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களுக்கும், யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய தூதர அலுவலகத்தில் நடைபெற்றது.